July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் உருவாக்கியதா?’: எதிர்க்கட்சி கேள்வி

அரசாங்கத்தின் மீதான அழுத்தம் காரணமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஒருவரை அரசாங்கம் உருவாக்கியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில், அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில், பிரதான சூத்திரதாரியை கண்டறிய போதுமான அளவு சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மேலெழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் பின்னபுலத்தில் சர்வதேசமும் பிரதான சூத்திரதாரி ஒருவரும் உள்ளதாக அனைவரும் கூறினாலும், ஆணைக்குழுவின் விசாரணையில் அவ்வாறனதொரு நபர் பற்றி வெளிப்படுத்தப்பட்டவில்லை என்றும் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரதான சூத்திரதாரி தொடர்பில் கூறுவதாகவும், பிரதான சூத்திரதாரி ஒருவர் இருந்திருந்தால், அதனை ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் ஏன் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதான சூத்திரதாரி என அறிவிக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி என்பவர், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நபரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றதற்கு தெளிவான சாட்சியங்கள் உள்ள போதும், அவை ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.