யாழ்.மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாவும், வெற்றிலை எச்சில் துப்பினால் 2 ஆயிரம் ரூபாவும் தண்டப் பணமாக அறவிடப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக மாநகரசபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து நாளை முதல் கடமையில் ஈடுபட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநகரத்தினை தூய்மையாக பேணுவதற்காக பொது இடங்களில் குப்பை கொட்டுவோர், வெற்றிலை எச்சில் துப்புவோர், வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவோர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரைத் தடுப்பதற்கும், குற்றமிழைப்போருக்கு தண்டப்பணம் விதிப்பதற்கு இவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக யாழ்.மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த காவலர்கள் தமது பணியினைச் செயற்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.