பேக்கரி மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்திகளுக்கு தேவையான பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதிப்பத்திர முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாம் எண்ணெய் இறக்குமதி மற்றும் செம்பனை செய்கையை தடை செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் ஏற்றுமதி- இறக்குமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஜனாதிபதியின் இந்த திடீர் அறிவிப்பால் தங்களது தொழிற்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பாராளுமன்ற அமர்வில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் குமார வெல்கம, தேசிய ரீதியில் பாம் எண்ணெய் உற்பத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது.அதனை பயன்படுத்த அரசாங்கம் அனுமதி வழங்குகின்றதா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளிக்கையில்,
தேசிய ரீதியிலான உற்பத்தியை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் பாம் எண்ணெய்யின் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அதனை அரசாங்கம் தடை செய்யாது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யையே தடை செய்துள்ளோம். அதுவும் உடனே தடை செய்ய முடியாது. பிஸ்கட் போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான சுத்தமான பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்றார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய குமார வெல்கம, தேசிய உற்பத்தியாளர்கள் புதிதாக பாம் மரங்களை வளர்க்க இடமளிக்க முடியுமா?என கேட்டபோது,அதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல,இல்லை, புதிதாக பாம் மரங்களை வளர்க்க இடமளிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.