கொள்ளுப்பிட்டி பகுதியில் வாடிக்கையாளர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்று முற்றுகையிடப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
அதிக விலையுடைய கையடக்கத் தொலைபேசிகளை மிகவும் குறைந்த விலைக்கு வழங்குவதாக பிரசாரம் செய்து வாடிக்கையாளர்களிடம் பெருந்தொகை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணம் செலுத்தி 20 நாட்களின் பின்னரே கையடக்கத் தொலைபேசி வழங்குவதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தினங்களில் கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்படாத காரணத்தினால் வாடிக்கையாளர்கள் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களது வங்கிக் கணக்குகளில் சுமார் 30 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமாத்திரமின்றி, குறித்த கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யாமல் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் நடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களை இலக்கு வைத்து சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி. கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தி செல்ல வேண்டுமானால் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும் என அந்த அதிகாரசபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.