
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தங்களின் அரசாங்கம் எந்தவித அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதல் பொறுப்பாகும் என்றும், கடந்த காலங்களை போன்று யாரையும் கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க தான் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைதாகியிருந்த ரிஷாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் சீ.ஐ.டியினரால் விடுதலை 5 மாதங்களின் பின்னர் கடந்த புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவரின் விடுதலை தொடர்பாக கொழும்பு பேராயர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இதில் அரசியல் தொடர்புகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, அரசாங்கம் ரிஷாத்தடன் எந்தவித அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்று உறுதிபட தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது நாட்டு மக்கள் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று மக்களுக்கு உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.