
“நீண்ட அனுபவமும் நிர்வாக ஆளுமையும் மிக்க பெருமகனார் வே.சிவஞானசோதியை தமிழ்ச் சமூகம் இழந்து நிற்கின்றது. இது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் வே.சிவஞானசோதியின் மறைவையொட்டி அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவரான சிவஞானசோதி இலங்கை நிர்வாக சேவையில் நீண்டகால அனுபவம் மிக்கவர். அவர் பல அமைச்சுகளில் செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.
குறிப்பாக இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.
இறுதியாக இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
அனைவருடனும் சகஜமாகப் பழகும் அவர், தனக்குக் கிடைத்த பதவிகளைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசத்துக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்து நேரடியாகச் சென்று பல திட்டங்களை மேற்பார்வை செய்து திறமையாகச் செய்து முடித்தவர்.
மிக முக்கியமாக, கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மிக நெருக்கமான முறையில் இணைந்து வடக்கு, கிழக்கில் அபிவிருத்திச் செயற்பாடுகள், வேலைவாய்ப்புக்கள், உள்ளிட்ட கணிசமான பல பணிகளைக் காத்திரமாக முன்னெடுத்தவர்.
அதேநேரம், எதிர்காலத்திலும் அவரது சேவைகள் தமிழ் மக்களுக்கு மிகவும் இன்றியமையாதவையாகவே இருந்தன. இதனைப் பலரும் உணர்ந்திருந்தார்கள்.அவரை மக்கள் சேவைக்கு அழைத்து வருவதற்கான சமிக்ஞைகள் பலவற்றையும் எமது கட்சியின் உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் வலியுறுத்தியிருந்தனர்.
சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த தருணத்தல் அவர் நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்திவிட்டார். அவரது பிரிவு தமிழினத்துக்குப் பெரும் இழப்பாகும்.
நிர்வாக ஆளுமை மிக்க பெருமகனாரை தமிழ்ச் சமூகம் இழந்துவிட்டது. அவரது இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடமாகும். அவரைப் பிரிந்து நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்