சீனாவின் விஷ தடுப்பூசியை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்ததினாலா தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தீர்கள்? என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ஹசித டி சில்வா, வைத்தியர் பாலித அபேகோன், வைத்தியர் லக்குமா பெர்னாண்டோ, எச்.என்.சி.ஹேரத், வைத்தியர் கபில ரணசிங்க ஆகியோரை சுகாதார அமைச்சர் பணிநீக்கம் செய்துள்ளார்.
இது அவர்களுக்கு செய்த மிகப்பெரிய அவமதிப்பாகும். இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட துறையில் மிகச்சிறந்த வைத்தியர்கள்.ஆனால் எந்த காரணிகளும் கூறாது இவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எமக்கு கிடைத்த தகவலின்படி சீன தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய காரணத்தினால் தான் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகங்களிலும் அவ்வாறே பிரசுரிக்கப்படுகின்றது, ஏனென்றால் இவர்களை நீக்கியதற்கான காரணத்தை இதுவரை அரசாங்கம் கூறவில்லை.
அதுமட்டுமல்ல சீன தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த தடுப்பூசி விஷ தடுப்பூசியாகும். இதனையே இலங்கையர்களுக்கு ஏற்றவுள்ளனர்.
எமது பாடசாலை காலத்தில் “தளனோமைத்” எனும் ஜெர்மானிய மருந்தொன்று உருவாக்கப்பட்டது. இந்த மருந்து குறித்து எந்தவித ஆய்வுகளும் செய்யப்படாது உலகில் சகல பகுதிகளுக்கும் கொடுக்கப்பட்டது.
இதன் விளைவு என்னவென்றால் இன்றும் ஐந்து இலட்சம் அங்கவீனர்கள் உலகளாவிய ரீதியில் உள்ளனர்.இதே போன்றதே சீன தடுப்பூசியின் நிலைமையும்.
இந்த நாட்டு மக்களுக்கு விஷம் ஏற்றவா அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களை நீக்கிவிட்டு அரசாங்கத்திற்கு தேவையான விதத்தில் வைத்தியர் நியமனங்கள் இடம்பெற்றுள்ளது.
உண்மையில் தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீக்கியதற்கான உண்மையான காரணம் என்ன என சபையில் கேள்வி எழுப்பினார்.