July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாம் எண்ணெய் இறக்குமதி தடை; இலங்கை மீது மலேசியா அதிருப்தி

பாம் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்தும் இலங்கையின் முடிவு தமது நாட்டின் எண்ணெய் பனைத் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மலேசியாவின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டத்துக் டாக்டர் மொஹமட் கைருதீன் அமன் ரசாலி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200,000 டன் பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.இதில் பெரும் பங்கு இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

இந்த நிலையில், பாம் எண்ணெய் வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில், நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அத்தோடு,முள்ளு தேங்காய் செய்கைக்கும் முழுமையாக தடை விதிப்பதுடன், ஒரு தடவைக்கு 10 சதவீதம் என்ற வகையில் முள்ளு தேங்காய் செய்கையை முழுமையாக அகற்றி, அதற்குப் பதிலாக இறப்பர் அல்லது சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான ஒரு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பையடுத்து மலேசியாவின் அமைச்சர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உலகில் ஏழு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நிலையில், உலகளவில் எங்கள்  பாம் எண்ணெய் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”

“எமது பாம் எண்ணெய்யை கொள்வனவு செய்ய ஒரு தரப்பினர் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், இன்னும் பலர் ஆர்வமாக உள்ளனர்.மிக முக்கியமாக நாட்டின் பாம் எண்ணெய்யில் உற்பத்தியில் சிறந்த தரத்தை நாங்கள் தருகிறோம்” என்று ரசாலி கூறியுள்ளார்.

மலேசிய பாம் எண்ணெய் 90 சதவீத தரம் வாய்ந்தது என சான்றிதழைப் பெற்றிருப்பதால் இலங்கை விதித்துள்ள கட்டுப்பாடுகள் பாகுபாடு கொண்டதாக தாம் உணர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, வெளிநாடுகளில் பாம் எண்ணெய்யை சந்தைப்படுத்துவதற்கான தமது நாட்டின் உரிமை சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது என்பதற்காக மலேசிய அரசாங்கத்திடமிருந்து பாம் எண்ணெய் தொடர்பில் முழுமையான தகவல்களை இலங்கை பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.