January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நௌபர் மௌலவியே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி’: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்து, அமைச்சரவை உப குழு சமர்ப்பித்த அறிக்கையில் இவ்விடயம் உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாரில் வசித்து வந்த நௌபர் மௌலவி, சஹ்ரான் உட்பட குழுவினரை மூளைச் சலவை செய்து, தாக்குதலுக்குத் தூண்டிய விடயம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் மாலைதீவில் 4 தீவிரவாதிகளைச் சந்திக்க இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர், உதவியுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாரா ஜெஸ்மின் உயிருடன் உள்ளாரா, இறந்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தாம் முயற்சித்து வருவதாகவும், சாரா உயிருடன் இருப்பது தெரியவந்தால், நாட்டுக்கு அழைத்து வருவதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.