July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் ராமநாயக்கவை சிறைக்கு அனுப்பியவர்கள் சஜித்தும் சம்பந்தனுமே; மகிந்தானந்த குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரே ரஞ்சன் ராமநாயக்கவை சிறைக்கு அனுப்பியதாகவும், ரஞ்சனின் வழக்கை ஜெனிவா வரையில் கொண்டு செல்லும் சூழ்ச்சியை எதிர்கட்சியினர் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மையில் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் சந்தித்த போது, இன்று தான் சிறையில் இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரும், சம்பந்தனுமே காரணம் என கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“அவருடைய வழக்கிற்கு 103 சாட்சியாளர்கள் இருந்தனர். ஆனால், மூவருடன் வழக்கை முடிவுக்கு கொண்டுவர கூறியதாக என்னிடம் தெரிவித்தார்.

இதனை நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன், உங்களுக்கு தேவை என்றால் நான் அவரது வாக்குமூலத்தை பெற்றுத்தருகின்றேன்” என்றும் மகிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

தனது வழக்கை இப்போது ஜெனிவாவிற்கு கொண்டு செல்வோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறி வருவதாகவும், ஜெனிவா கடிதத்தில் தான் கையொப்பமிட மாட்டேன்’ என்று ரஞ்சன் கூறியதாக அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரஞ்சனை சிறைக்கு அனுப்பி, அவருக்காக இருந்த சாட்சியங்களை மறைத்து அவரது வழக்கை ஜெனிவா வரையில் கொண்டு செல்லும் முயற்சியில் எதிர்க்கட்சி ஈடுபட்டு வருவதாகவும் மகிந்தானந்த குற்றம்சாட்டியுள்ளார்.

“சிறையில் ரஞ்சனுக்கு உணவு இல்லை, அவரைப் பார்க்கச் செல்ல ஒருவரும் இல்லை, ஆடைகள் இல்லை, ஆனால், எதிர்க்கட்சி அவருக்காக நீலிக்கண்ணீர் வடித்து, அவரை வைத்து அரசியல் செய்கின்றனர்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.