
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிவரும் காலங்களில் நாட்டிற்குள் நுழைய வெளிவிவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த வருடம் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் உட்பட ஏராளமானோர் இலங்கை வர முடியாமல் சிக்கியிருந்தனர். அதன் பின்னர் அவ்வாறு சிக்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாட்டுக்கு அழைக்கும் செயற்றிட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில், தங்களது சொந்த செலவில் நாடு திரும்புவதற்கு தயாராக உள்ளவர்கள், வெளிவிவகார அமைச்சின் முன் அனுமதியுடன் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், அனுமதியை பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தர முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செயற்பாடு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுலாக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, பண்டிகை காலத்தின் போது நாட்டில் பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.