இலங்கையின் தேர்தல் சட்டம் மற்றும் தேர்தல் முறையில் ஏற்படுத்த வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்கான தெரிவுக் குழு அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
பிரேரணையின் படி, தெரிவுக் குழுவுக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதோடு, 6 மாதங்களில் சபாநாயகருக்கு அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போதுள்ள தேர்தல் சட்டம், தேர்தல் முறையின் குறைபாடுகளை அடையாளம் கண்டு, திருத்தங்களைப் பரிந்துரைப்பதே தெரிவுக் குழுவின் பணியாகும்.
தேர்தல் சட்டம் மற்றும் தேர்தல் முறை தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும் துறைசார் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.