
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியின் மேலும் 6 மில்லியன் டோஸ்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 7 மில்லியன் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதற்கமைய தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேனவுக்கும், ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை தயாரிக்கும் ரஷ்ய நிறுவன பிரதிநிதிகளுக்கும் இடையே அண்மையில் கைச்சாத்தானது.
ஒப்பந்தத்தின்படி, முதல் தொகுதி தடுப்பூசிகள் இந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.