இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திகா சேனாரத்ன ஊடகம் ஒன்றுக்கு அளித்த அறிக்கை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்படும், பருப்பு, மிளகாய்த் தூள், தேங்காய் எண்ணெய், மீன் டின் போன்ற பல உணவுப்பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திகா சேனாரத்ன தனியார் செய்திச் சேவையுடனான நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் மிளகாய்த் தூள் போன்றவற்றிலும் இந்த வேதிப்பொருள் இருக்கலாம் என குறிப்பிட்டதுடன் உண்மைகளை வெளிப்படுத்தினால் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிப்படையும் எனவும் கூறியிருந்தார்.
சிறிது காலம் அவகாசம் வழங்கியேனும் அவ்வாறான நிறுவனங்களை சரி செய்ய முயன்று வருவதாக குறித்த நேர்காணலில் டொக்டர் சித்திகா சேனாரத்ன தெரிவித்தார்.
இந்நிலையில், சந்தையில் விற்கப்படும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் குறித்து அறிந்திருந்தும் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க இலங்கை தர நிர்ணய நிறுவனம் தவறியுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, மக்கள் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை தர நிர்ணய நிறுவனம் பணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று சங்கம் கூறுகின்றது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் சித்திகா சேனாரத்னவின் அறிக்கை குறித்து விசாரிப்பதுடன், சந்தையில் விற்கப்படும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.