2021 ஆம் ஆண்டின் ‘திருமதி ஶ்ரீலங்கா’ அழகிப் போட்டி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் தாங்கள் வருந்துவதாக திருமதி உலக அழகி போட்டி ஏற்பாட்டுக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அத்தோடு 2020 திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரியின் நடத்தை குறித்து ஆராய்ந்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து 2020 திருமதி உலக அழகியான கரோலைன் ஜூரியிடம் விளக்க அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்தப்பட்டுள்ளது.
2021 திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கையின் திருமதி அழகியைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
இந்த போட்டியில் நடுவர்கள், எண் 20 இல் போட்டியிட்ட புஷ்பிகா டி சில்வா என்ற பெண்ணை இலங்கையின் திருமதி அழகியாக தெரிவு செய்து அறிவித்தனர்.
2020 ஆம் ஆண்டின் ‘திருமதி உலக அழகியாகத்’ தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் கரோலின் ஜூரி, வெற்றிப் பெற்ற புஷ்பிகாவுக்கு கிரீடம் அணிவித்தார்.
இவ்வாறு கிரீடம் அணிவித்து ஒரு சில நிமிடங்களில், ‘திருமதி உலக அழகியாகப் போட்டியிடுபவர்கள் திருமணம் முடித்தவராக இருப்பதுடன், விவாகரத்துப் பெற்றவராக இருக்கக் கூடாது’ என அறிவித்த கரோலின் ஜூரி, புஷ்பிகாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை நீக்கி, இரண்டாவது இடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு அணிவித்தார்.
இந்தத் திடீர் அறிவிப்புக்கும் செயற்பாட்டுக்கும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் கூச்சலிட்டு, எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அங்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புஷ்பிகா விவாகரத்துப் பெறாதவர் என்பது உறுதியாகியுள்ளதாகவும், அவருக்கு கிரீடத்தை மீண்டும் அணிவிக்க போட்டி ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்தார்.
இதனிடையே, திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டுக்குழுவின் இந்த அறிக்கை வந்துள்ளது.
சம்பவம் குறித்து முன்னாள் திருமதி உலக அழகி ரோஸி சேனாநாயக்க ஊடகங்களுடன் கூறும் போது, நடுவர்கள் வழங்கிய முடிவை மாற்றுவது அவமானம் என்றும் இது நடந்திருக்கக்கூடாது என்றும் மேடையில் நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அதிர்ச்சியூட்டும் விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், புஷ்பிகா 2019 ஜனவரி 30 ஆம் திகதி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும், குழந்தையை பராமரிப்பதற்காக 200,000 ரூபா மற்றும் அவரது கணவரிடம் விவாகரத்து தீர்வுக்காக 680 மில்லியன் ரூபா கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், திருமதி உலக அழகி போட்டிக்கு இலங்கை ஏற்பாட்டுக்குழு சட்டபூர்வமாக திருமணமான ஒரு பெண்ணை சமர்ப்பித்தால், அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என திருமதி உலக அழகி போட்டியின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.