July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை; அமெரிக்காவிடமிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்’

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் இலங்கை அமெரிக்காவின் புத்தகத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவில் 9 -11 தாக்குதல்களை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கை, அந்த பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடனை கைது செய்வதற்கு அந்த அரசாங்கத்திற்கு உதவியது.

9/11 தாக்குதலை நடத்துவதற்கு பின்லேடன் பல ஆண்டுகளாக திட்டமிட்டதையும் அந்த ஆணைக்குழு கண்டுபிடித்திருந்தது.

அதேபோன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடிக்க இலங்கையும் இதேபோன்ற தந்திரங்களை பின்பற்ற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்ற புலனாய்வுத் பிரிவில் வாக்குமூலம் அளிக்க சென்ற வேளையில்,சஜித் பிரேமதாசாவும் அங்கு சென்றிருந்த நிலையில்,விசாரணைகள் முடிவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“9/11 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பராக் ஒபாமா செயல்படுத்தினார். அதேபோன்ற ஒரு முறையைத்தான் இலங்கையும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும்,பயங்கரவாதம்,போதைப்பொருள் விற்பனையாளர்களை ஒழிக்க சிங்கப்பூரில் உள்ள சட்டங்கள் போன்று இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.