July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்; நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

நளின் பண்டார வௌியிட்ட கருத்திற்கு எதிராக அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்ற உரையில் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் குறித்து வௌியிட்ட தகவல் பொய்யானது என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹரான் ஹாசிம் மலேசியாவில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை சந்தித்ததாகவும் அவர்களுக்கு மலேசியா, இந்தியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லத் தேவையான வசதிகளை சுரேஷ் சாலே ஏற்படுத்தி கொடுத்ததாகவும் நளின் பண்டார தனது உரையில் கூறியுள்ளார்.

அத்தோடு சஹரான் ஹாசிம் குறித்தும் முழுமையான விடயங்களை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அறிந்திருந்தும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்படவில்லை எனவும் நளின் பண்டார தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே நளின் பண்டாரவின் இந்த கருத்துக்கள் அனைத்தும் பொய்யானது என தெரிவித்து மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பில் விபரங்களை தெரிவிப்பதற்காக இன்றைய தினம் நளின் பண்டாரவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்று தருவதாக கூறி தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாகவும், அது அவர்களின் முக்கிய பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.