January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் நீக்கப்பட்ட முறைமை அரசியலமைப்புக்கு முரணானது’ ; நீதி அமைச்சர் அலி சப்ரி!

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அதனால் இந்த தவறான நடவடிக்கையை சரி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப் போவதாக நீதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கு அமைவாக 2013 ஜனவரி 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கடந்த 2015 ஜனவரி 28ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி. அபேகோனின் கடிதம் ஒன்றின் மூலம் நீக்கப்பட்டுள்ளார்.

நீதியரசர்களை அந்த பதவியில் இருந்து நீக்குவதாக இருந்தால் அது தொடர்பில் நிலையியற் கட்டளைகள் ,முறைமைகள் இருக்கின்றன. அதன் பிரகாரமே முன்னாள் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்டார்.

சிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தீர்மானத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் சவாலுக்குட்படுத்தியிருந்தன.

இது தொடர்பாக ஆராய உயர் நீதிமன்றம் 5பேர் கொண்ட நீதியரசர் குழுவை நியமித்தது. அதன் பிரகாரம் சிராணி பண்டாரநாயக்க பிரதமர் நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சட்ட ரீதியிலானது என அந்த குழு தீர்ப்பளித்திருந்தது.

இவ்வாறான நிலையில் அரசியலமைப்புக்கு அமைவாக பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டிருந்த மொஹான் பீரிஸ் ஜனாதிபதி செயலாளரின் கடிதம் மூலம் நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது.

அவ்வாறு நீக்கப்படுவதாக இருந்தால் பாராளுமன்ற குழு ஒன்றின் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும். எனவே இந்த தவறை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனால் இது தொடர்பாக பிரதமருடன் கலந்துரையாடி இந்த பிழையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர் பிரமித் பண்டார தென்னகோனினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.