
எதிர்வரும் 10 நாட்களுக்கு சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பருவமழைக்கு இடைப்பட்ட காலங்களில் இது போன்ற வெப்பமான காலநிலை சாத்தியமாகும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் குறைவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகளால் உஷ்ணமான காலநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு 1 முதல் 3 செல்சியஸ் வரை அதிகரித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன் வடதிசை நோக்கி பயணிப்பதன் காரணமாக 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதேநேரம், மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது இவ்வாறிருக்க, உஷ்ணமான காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால் அதிகமாக நீர் அருந்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உட்பட உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காங்கேசன் துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.
காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன், கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படுவதுடன் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன் துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.