October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘திருமதி அழகி’ சர்ச்சை: பறிக்கப்பட்ட கிரீடத்தை முதல் வெற்றியாளருக்கு திருப்பி வழங்க முடிவு

photos: Facebook/Pushpika De Silva

இலங்கையின் 2020 ஆம் ஆண்டின் ‘திருமதி அழகி’ போட்டியில் வெற்றியாளர் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க, புஷ்பிகா டி சில்வாவுக்கு வெற்றிக் கிரீடத்தை வழங்கும் நிகழ்வை நாளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு கீரிடம் அணிவிக்கப்பட்டதன் பின்னர், அவரிடம் இருந்து கிரீடத்தை எடுத்து இரண்டாம் இடம் வந்த போட்டியாளருக்கு அணிவித்ததால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கையின் திருமதி அழகியைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இந்த போட்டியில் நடுவர்கள், எண் 20 இல் போட்டியிட்ட புஷ்பிகா டி சில்வா என்ற பெண்ணை இலங்கையின் திருமதி அழகியாக தெரிவு செய்து அறிவித்தனர்.

2020 ஆம் ஆண்டின் ‘திருமதி உலக அழகியாகத்’ தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் கரோலின் ஜூரி, வெற்றிப் பெற்ற புஷ்பிகாவுக்கு கிரீடம் அணிவித்தார்.

இவ்வாறு கிரீடம் அணிவித்து ஒரு சில நிமிடங்களில், ‘திருமதி உலக அழகியாகப் போட்டியிடுபவர்கள் திருமணம் முடித்தவராக இருப்பதுடன், விவாகரத்துப் பெற்றவராக இருக்கக் கூடாது’ என அறிவித்த கரோலின் ஜூரி, புஷ்பிகாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை நீக்கி, இரண்டாவது இடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு அணிவித்துள்ளார்.

இதனால் கவலையடைந்த புஷ்பிகா டி சில்வா மேடையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தத் திடீர் அறிவிப்புக்கும் செயற்பாட்டுக்கும் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் கூச்சலிட்டு, எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், அங்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பில், இன்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

போட்டியாளர்களை தெரிவு செய்யும் முன்பு இது குறித்து அறிவித்திருக்க வேண்டும் எனவும், இந்த விடயத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட கரோலின் ஜூரி பொது மேடையில் நடந்து கொண்ட விதம் போட்டியாளரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், முதலில் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின்னர், வெற்றியாளர் மாற்றப்பட்டமை குறித்து புஷ்பிகா டி சில்வா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக புஷ்பிகா டி சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அழகிப் போட்டியொன்றில் இவ்வாறு அவமதிக்கும் விதமாக நடத்தப்பட்டது இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலேயே இது முதல் தடவையாகும்.

இது எனக்கு இன்னுமோர் சம்பவம் மாத்திரமே, நான் இந்த அறிக்கையை எழுதும் போதும் தலைநிமிர்ந்துள்ளேன்.

இந்தக் கிரீடத்தைப் பறிக்கும் போது ஏற்பட்ட கவலை! பறிக்கும் போது தலையில் ஏற்பட்ட காயம்! போன்றவற்றைவிட, ‘அம்மாவின் தலையில் ஏற்பட்ட காயம் வலிக்கின்றதா? என்று சிறிய மகன் கேட்கும் போது ஏற்பட்ட வலியே அதிகமானது.

நான் விவாகரத்துப் பெற்றவள் என்று கூறப்பட்டாலும், இதுவரையில் நான் விவாகரத்தாகவில்லை. அவ்வாறு கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும்.

நான் இந்தப் போட்டிக்குத் தகுதியில்லை என்றால், ஏற்பாட்டாளர்கள் ஆரம்பத்திலேயே என்னைத் தெரிவுசெய்யாமல் இருந்திருக்க வேண்டும்.

எனக்கு ஏற்பட்ட அநீதிக்கும், அவமானத்துக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.”

இதேநேரம், கிரீடத்தை நீக்கும் போது தலையில் ஏற்பட்ட காயத்தால் புஷ்பிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஷ்பிகா விவாகரத்துப் பெறாதவர் என்பது உறுதியாகியுள்ளதாகவும், அவருக்கு கிரீடத்தை மீண்டும் அணிவிக்க நாளை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.