யாழ்ப்பாணம் மிருசுவில், எழுதுமட்டுவாழ் ஏ-9 வீதியை அண்டிய ஆசிப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவுக்கு முகாம் அமைப்பதற்காக காணி கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு பிரதேச மக்களால் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை காணியை அளக்க அங்கு சென்றிருந்தபோது, பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் அங்கு கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
படை உயர் அதிகாரிகளோடும் அங்கிருந்த மக்கள் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச செயலாளர் நில அளவைத் திணைக்கள அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
எனினும், அங்கிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரி ஒருவர் இராணுவ முகாமிற்குள் பிரவேசித்ததால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, காணி அளக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.