July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சனின் எம்.பி ஆசனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!

தனது பராளுமன்ற ஆசனம் இல்லாமல் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் எழுத்தாணை ஒன்றினை பிறப்பிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் அர்ஜுன் ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் எவ்வித சட்ட அடிப்படையும் இல்லையெனவும், இதனால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர்நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த சிறைத் தண்டனைக்கு அமைய, ரஞ்சன் ராமநாயக்க அவரது எம்பி. பதவியை இழந்துள்ளதாக சட்ட மாஅதிபர், பராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, 3 மாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனம் இல்லாமல் செய்யப்படும் என்பதற்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவின் 3 மாத காலம் நிறைவடையவுள்ளது.

அதற்கு முன்னர் அவரது எம்பி பதவியை பறிப்பதை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு, அவரது சட்டத்தரணி சுரேன் பெனாண்டோ கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதன்படி, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அறிவித்தலை வெளியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் வரை ஒத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில், குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காகவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதே தவிர குற்றச்செயல்கள் தொடர்பில் அல்லவெனவும், அதனால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்படுவது சட்ட அடிப்படையற்றதென ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு கருத்து வெளியிடும் போது ரஞ்சன் ராமநாயக்க கோரியுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென சுட்டிக்காட்டினார்.

அதனால் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதன்படி, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.