January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் ‘திருமதி அழகி’ போட்டி: கிரீடம் அணிவிக்கப்பட்ட பின்னர் வெற்றியாளரை மாற்றியதால் குழப்பம்!

இலங்கையின் 2020 ஆம் ஆண்டின் திருமதி அழகி போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு கீரிடம் அணிவிக்கப்பட்டதன் பின்னர், வெற்றியாளரை மாற்றி அந்தக் கிரீடம் அகற்றப்பட்டதால் போட்டி நிகழ்வில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

திருமதி உலக அழகி போட்டிக்காக, இலங்கையின் திருமதி அழகியைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்‌ஷ, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.

இந்த போட்டியில் நடுவர்கள், எண் 20 இல் போட்டியிட்ட புஷ்பிகா டி சில்வா என்ற பெண்ணை இலங்கையின் திருமதி அழகியாக தெரிவு செய்து அறிவித்தனர்.

2020 ஆம் ஆண்டின் திருமதி உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் கரோலின் ஜூரி, வெற்றிப் பெற்றவருக்கும் கிரீடம் அணிவித்தார்.

எனினும் ஒரு சில நிமிடங்களில் திருமதி உலக அழகியாகப் போட்டியிடுபவர்கள் திருமணம் முடித்தவராக இருப்பதுடன் விவாகரத்து ஆகாதவராகவும் இருக்க வேண்டும் என அறிவித்த கரோலின் ஜூரி, இதன்படி இரண்டாவது வெற்றியாளரே இதில் வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவித்து, முதலில் அறிவிக்கப்பட்ட வெற்றியாளருக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை நீக்கி இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்தார்.

இதனால் கோபம் அடைந்த புஷ்பிகா டி சில்வா மேடையை விட்டு வெளியேறினார்.
இதன்போது அங்கிருந்தவர்கள் வெற்றியாளர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், அங்கு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

போட்டியாளர்களை தெரிவு செய்யும் முன்பு இது குறித்து அறிவித்திருக்க வேண்டும் எனவும், இந்த விடயத்தில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட கரோலின் ஜூரி பொது மேடையில் நடந்து கொண்ட விதம் போட்டியாளரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், முதலில் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின்னர், வெற்றியாளர் மாற்றப்பட்டமை குறித்து புஷ்பிகா டி சில்வா பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.