November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் ஆணைக்கு எதிராக அரசாங்கம் செல்கிறது’ ; உதய கம்மன்பில

6.9 மில்லியன் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசாங்கம் செல்கிறது என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில, அரசாங்கத்திற்குள் நாங்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பது உண்மை தான் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

“அரசாங்கத்திற்குள் ஒரு உள் பிளவு இருக்கிறதா என்று சிலர் எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் அரசாங்கத்திற்குள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால்,அந்த போராட்டம் அரசாங்கத்தை அழிப்பதற்கான போராட்டம் அல்ல.மாறாக மக்கள் அளித்த ஆணை மற்றும் அவர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதற்கான போராட்டத்தையே நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

மக்களின் ஆணையை நாங்கள் மதிப்பது என்றால் எங்களிற்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களின் ஆணையை மதிக்கவேண்டும்.

பெறப்பட்ட ஆணையை நாங்கள் பாதுகாக்கிறோம் என்றால், 20 வது திருத்தம் அது வந்த வழியில் வந்திருக்காது. நாங்கள் ஆணையைப் பாதுகாக்கிறோம் என்றால், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கும் எண்ணம் கூட இந்த அரசாங்கத்தின் தலைவர்களின் மனதில் வந்திருக்காது, அவர்கள் ஆணையைப் பாதுகாக்கிறார்களானால், நமது அரசியல் தலைவர்கள் சட்டம் ஒழுங்கை துன்புறுத்தும் முடிவுகளை எடுக்க மாட்டார்கள் ”.

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பணியாற்றிய முன்னோடிகள் என்ற வகையில், அவர்களுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களின் விருப்பத்திற்கு எதிராக செல்லும் அரசாங்கத்தின் தவறுகளை சரிசெய்வது எமது கடமை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.