யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 2 ஆம் தவணை விடுமுறையின் பின்னரே மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 பரவல் சடுதியாக அதிகரித்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய மேலும் ஒரு வாரத்திற்கு குறித்த தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் போதே மீள திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் இருவர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபரும் ஆசிரியரும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.