
இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில்,இந்த தாக்குதல் குறித்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை நாளை(திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக இந்த உபகுழு நியமிக்கப்பட்டிருந்தது.
உபகுழுவின் அறிக்கையில் குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனைகளை நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன்னர் ஜனாதிபதிக்கு ஒரு சாராம்சத்தை பெற்றுக்கொடுக்கவும்,அரசாங்கமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து ஆராய்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சரவை உப குழு முன்னெடுத்துள்ளது.
அத்தோடு இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் நிச்சயமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை உபகுழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உபகுழுவின் குறித்த அறிக்கை கடந்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் இரு வாரகாலம் பிற்போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.