July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்; கடமை தவறிய மைத்திரிக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துங்கள் என பேராயர் கோரிக்கை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவால் குற்றவாளி என கூறப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த நிலையில், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொழும்பு – கொட்டாஞ்சேனை சென். லூசியா தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை இடம்பெற்றிருந்தது.

இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பேராயர்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை இன்று நினைவு கூருகிறோம்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்பட வேண்டும்.

உண்மையில் நாங்கள் வெட்கப்படுகிறோம். முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் தேர்தலில் களமிறங்கப் போவதாக ஒரு வதந்தி உள்ளது. கடமைகளை மறந்து வெளிநாடு சென்ற ஒரு ஜனாதிபதி எப்படி மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும். அவர் எப்படி ஒரு கட்சித் தலைவராக முடியும்?

அதேபோல, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அத்துடன், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் ஏனைய சிலர் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றனர். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே, நடுநிலையாக தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேராயர் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.