November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேறு நோய்க்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் இவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படாமையினால், இந்த விடயம் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்து அழைத்து வருபவர்களிடையே இருந்து மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலைமையில் உள்ளூரில் இந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பாக சுகாதார துறையினர் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வுகளை நடத்தி வரும் சுகாதார அதிகாரிகள், தொற்றுக்கு உள்ளான பெண் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் பலர் சமூகத்திற்குள் தொற்றுடன் இருக்கலாம் என்ற அச்சத்தினால் பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவதானத்துடன் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 3395 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3254 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.