தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் பிரயோசமற்றது என்று இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் இதுபோன்ற சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்ட போதும், அவற்றை செயற்படுத்துவதில் சுகாதார அமைச்சு தோல்வி கண்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகள் அடங்கிய அறிவித்தல் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
நாட்டில் அடையாளம் காணப்படாது பல தொற்றாளர்கள் இருக்கலாம். இவ்வாறான நிலைமையில் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்தும் போது அதற்கு பின்னர் நாடுபூராகவும் கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.