July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சிறை அறைகளுக்குள் இருந்தபடி ஆயருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்”: அரசியல் கைதிகள்

இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவரே மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, இவருக்காக சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலியை செலுத்துகின்றோம் என்று தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள், தமது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ள இறங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வேடம் அணிந்து கோசமிட்டு முதன்மை இருக்கைகளை தம்வசப்படுத்தி மாலை மரியாதைகளுடன் வலம்வருகின்ற வெற்றுச்சமூக பற்றாளர்களை போலன்றி, சொல்லுக்கும் செயலுக்குமுள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி நீதி, நேர்மைக்காக துணிவோடு போராடிய அறப்போராளியாக தன் அடையாளத்தை பதித்துவிட்டே ஆயர் சென்றுள்ளார் என்று தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆயர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களை தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி ஒரு அன்னையை போல ஆற்றுப்படுத்தி ஆசிர் வதித்து வந்தார் என்றும், அரசியல் கைதிகள் விடயத்தில் முன்னின்று செயற்பட்டு வந்தவர் என்றும் அவர்கள் தமது இரங்கல் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று அலுத்தோயாது மக்கள் பணி செய்து வந்த மகானின் பேரிழப்பால் துயரமடைந்திருக்கின்ற அத்தனை மனித இதயங்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவரின் ஆத்மா பரம பதமடைய சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். என்றும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.