இலங்கையில் இடம்பெறுவதாக கூறப்படும் காடழிப்பு குறித்து ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனை கூறியுள்ளார்.
சிங்கராஜ வனம் உள்ளிட்ட தேசிய வனப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவதாகவும், இதனால் வனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதன்போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும், ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் இதுபற்றி முறைப்பாடுகளை செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நீதிமன்றத்திற்கு சென்று சிங்கராஜ வனப்பகுதியில் இடம்பெறும் காடழிப்பை தடுக்க நடவடிக்கையெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தேசிய வனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டில் அனைவரும் பச்சை நிற ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க அந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.