
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூறும் ‘உயிர்த்த ஞாயிறு’ தினத்தை உலகம் பூராகவும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூசைகள் நடைபெற்றன.
விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே திருப்பலி பூசைகள் நடைபெற்றன.
2019 ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், சுற்றுலா ஹோட்டல்களையும் இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதனால் கடந்த வியாழக்கிழமை இரவு முதல் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் இவ்வாறு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் வழிபாடுகள்
மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் கட்டட வேலைகள் இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் மன்ரசா வீதியில் புதிய சீயோன் தேவாலயம் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இராணுவ மற்றும் பெலிஸார் பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.
மன்னாரில் ஈஸ்டர் திருப்பலி பூசை
மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூசை இடம் பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
மக்கள் சுகாதார நடை முறைகளை பின்பற்றி அதில் கலந்து கொண்டனர்.
திருப்பலி இடம்பெற்ற போது அந்தப் பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மலையகத்தில் ஈஸ்டர் தின நிகழ்வுகள்
இதேவேளை மலையக கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய மிகவும் அமைதியான முறையில இடம்பெற்றன.
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் தேவ ஆராதனைகள் ஆலய பங்கு தந்தை நியூமன் பீரிஸ் தலைமையில் நடைபெற்றதுடன் ஈஸ்டர் தின திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
ஈஸ்டர் தினத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அவர்களின் ஆத்மா சாந்திக்காக விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
அத்தோடு, நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் தேவாலயத்தின் ஈஸ்டர் தின நிகழ்வுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய பங்கு தந்தை அருட் சுதத் ரோகன பெரேரா தலைமையில் நடைபெற்றது.