November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை சரியான வழியில் பயணிக்க வேண்டுமாகவிருந்தால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’

இலங்கை சரியான வழியில் பயணிக்க வேண்டுமாகவிருந்தால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே இலங்கைக்கு சிறந்ததாகும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

நாங்கள் சர்வதேசத்திடமே நீதிகோரி நிற்கின்றோம், சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம். இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை.இருதரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் வழங்கிய எதிர்பார்ப்புகளுக்கு அமைய அந்த விடயங்கள் நடக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் மனநிலையில் உள்ள விரக்தி நிலையும் அதுதான். சர்வதேசம் எங்களை கை விட்டு விட்டது என்ற கருத்துக்களை அவர்கள் முன்வைப்பதற்கும் இதுதான் காரணம்.

உண்மையை சொல்லவேண்டுமாகவிருந்தால் சர்வதேசம் தமிழர்களை கைவிடவில்லை. நாங்கள் தான் நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கின்றோம்.இந்த உண்மையை நாங்கள் சொன்னால் இவர் அரசாங்கத்திற்காக பேசுகின்றார் என்று எங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை. உண்மையைத்தான் சொல்கின்றோம்.

பொய்யான எதிர்பார்ப்பினை வழங்குவது என்பது பிழையான விடயமாகும். 30ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் உள்ள நிலையில், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவேன் என்ற எதிர்பார்ப்பினை ஒரு தாய்க்குக் கொடுப்பது என்பது மிகவும் கொடுமையான செயல்.

நீதி கிடைக்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.அதற்கு இயன்றதை நாங்கள் செய்வோம்.உண்மையைச் சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டபோது, அதனை சிங்கள ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன் எம்.பி என்று செய்தி வெளியிட்டபோது சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எனக்கு எதிரான கருத்துகள் வெளிப்பட்டன.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அதனை நாங்கள் மறுக்கவில்லை.இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை. இலங்கை சரியான வழியில் பயணிக்க வேண்டுமாகவிருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே இலங்கைக்கு நல்லதாகும். இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பிச்செல்வது இலங்கைக்கு நல்லதல்ல.

மனித உரிமை பேரவையினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லமுடியாது. அதற்கான அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு இல்லை. நாங்கள் போராட்டங்களை நடத்தி, சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் பத்து பேர் உயிரிழந்தாலும் மனித உரிமை பேரவையினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லமுடியாது. பாதுகாப்பு சபைக்கு மட்டுமே குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கான அதிகாரம் உள்ளது.

முன்னைய 30/1, 34/1, 40/1 தீர்மானங்களில் கலப்பு நீதிமன்ற முறை சொல்லப்பட்டிருந்தது. இந்த தடவை அது சொல்லப்படவில்லை.அதுமட்டுமன்றி ஒரு முழுமையான நீதிமன்ற பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில்,இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் வந்திருக்கின்றது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்படுகின்றது.பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் எங்களிடம் கேட்டிருந்தனர். இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை நாங்கள் கோரவில்லை. ஏனென்றால் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை வந்தால் அதில் மிகவும் மோசமாக பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களே ஆவர்.ஆனால் பொருளாதார தடையினை கோரவேண்டிய நிலைமை வரலாம். அதனை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால் இம்முறை நாங்கள் பொருளாதார தடை சம்பந்தமாக கோரிக்கை விடுத்திருக்கவில்லை.

அந்த வகையில், இலங்கைக்குள் தீர்வொன்றினை ஏற்படுத்த வேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கின்ற முற்போக்கு சக்திகளும் எங்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் நாங்கள் தக்கவைக்க வேண்டும்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வருவது ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல.அவர்களுக்கு அது அழுத்தமல்ல. அவர்களிடம் போதுமானளவு வளம் இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்களை குறிவைத்து தடைகள் வருமானால் அதுதான் அழுத்தமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.