July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தயார்’; கெஹெலிய ரம்புக்வெல

காணாமல் போனோர் சம்பந்தமாக தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களுடைய உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டுமானால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

காணாமல் போனோர் சம்பந்தமாக அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது.அதாவது தற்பொழுது எடுக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால் அதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவற்றை கொடுப்பதற்கு நாங்கள் தயாராயிருக்கிறோம்.

அதேபோல் காணாமற்போனோர் ​தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது.அதனை விரைவில் மூடியே ஆக வேண்டும்.

கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் காணாமல் போனோர் அலுவலகத்தை நாங்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.ஆனால் ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமென்று தெரிவிக்கமுடியாது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்தும் மாறுபட் டவை. நாளை என்ற நம்பிக்கை அன்று இருந்திருக்கவில்லை.பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டார்கள்.விடுதலை புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடயதானங்கள் பல அன்று இருந்தன.அது நாட்டில் தொடர்ந்திருந்தால் இந்த நாட்டை ஒரு ஜனநாயக நாடென்று கூறமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.