July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது’; உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் வரையான கிறிஸ்தவ மக்கள் பொறுமை அளப்பரியது என  பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தமது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அது தொடர்பிலும் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை நாம் அனைவரும் அறிந்ததே”.

‘அந்த கொடிய தாக்குதலை அன்று போன்றே இன்றும் நாம் வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதலில் உயிரிழந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கிறிஸ்தவ சமூகத்தினர் எதிர்பார்ப்பது போன்று, தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை விசாரணைகள் தடையின்றி தொடரும்.

சமூகத்தில் முகங்கொடுக்க நேரிடும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இரக்கம், சகவாழ்வு மற்றும் பரஸ்பர அன்புடன் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வாழ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

அத்தோடு, “இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.