
கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் மூடப்பட்டுள்ள யாழ். நகர வர்த்தக நிலையங்களை உடன் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வர்த்தக சங்கம் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வர்த்தக சங்கத்தின் செயலாளர் ச.சிவலோகேசன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசனுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அவசர கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாழ். நகரின் முக்கிய பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் சில பாரபட்சமான விடயங்கள் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வர்த்தகர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்ட நிலையில், அதே பகுதிகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்புறுதி நிறுவனங்கள், நகை அடகு நிலையங்கள் போன்றவை வழமை போல் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, நகரத்தின் முக்கிய பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் மொத்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
‘கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக வர்த்தகத்துறை பாதிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள தடையானது, மேலும் பாரியளவில் பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது’ எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து திங்கட்கிழமையில் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கடைகளைத் திறந்து, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்’ என்றும் யாழ். வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது