அரசாங்கத்துக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் போலி பிரசாரங்களைத் தோற்கடிப்போம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்துக்கான ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வை வவுனியாவில் ஆரம்பித்து வைத்து, உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக பல்வேறு விதமாக திட்டமிடப்பட்ட போலி பிரசாரங்கள் சமூகமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆட்சிக்கு வரும் போது, சிலர் மீண்டும் வெள்ளை வேன் யுகம் ஏற்படும் என்று கூறியதாகவும், இப்போது அவை எதுவும் இல்லாததால் காடழிப்பு விடயத்தைப் பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் காடழிப்பு இடம்பெறும் போது, அமைதியாக இருந்தவர்கள் இன்று சூழலியலாளர்களாக மாறியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“கிராம மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு விளங்குவதில்லை. இங்கு வந்து பார்த்தாலே புரியும்.
நான் மக்களுக்கு இந்தக் காணிகளை வழங்கக் கோரினால், காடுகளை அழிக்கப் போவதாக விமர்சிப்பார்கள்.
நான் மக்களுக்கு வாக்களித்த விடயங்களையே மேற்கொள்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷவைவிட, நாட்டை மாற்றும் கொள்கைகளையே மக்கள் பாதுகாக்க வேண்டும்”
என்றும் ஜனாதிபதி வவுனியாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.