சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகிவரும் நிலையில், சுகாதார அமைச்சினால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வழிகாட்டல்கள் அடங்கிய குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, சித்திரைப் புத்தாண்டு பண்டிகையின் சம்பிரதாய நிகழ்வுகளையும் களியாட்டங்களையும் முன்னெடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டிற்கான விசேட சுகாதார வழிகாட்டல்கள்.
எண்ணெய் தேய்த்து குளித்தல், உணவுப் பொருட்களைப் பரிமாறுதல், தொழில் ஆரம்பித்தல், கைவிசேட நடவடிக்கைகள், போன்ற செயற்பாடுகளை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத்தலங்களுக்கு செல்பவர்கள் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து வழிபாடுகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உறவினர் வீடுகளுக்கு செல்வதையும் இனிப்பு பண்டங்கள் பரிமாறுவதையும் அயலவர்களுடன் இணைந்து விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவதையும் இயலுமானவரை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விளையாட்டுப் போட்டிகளின் போது சமூக இடைவெளியைப் பேணுதல், கை கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற விடயங்களைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சமூக இடைவெளியைப் பேண முடியாத கயிறு இழுத்தல், தலையணை சண்டை போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்வது பொருத்தமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தவிர சமூக இடைவெளியைப் பேணி நடத்தப்படும் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளின் போது, பங்குபற்றுபவர்கள் சுகாதார வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதை, புதுவருட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர் உறுதி செய்துகொள்ளுதல் அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, புதுவருடத்திற்காக நகரங்களிலிருந்து ஊர்களுக்கு செல்பவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அவதானம் மிக்க பகுதிகளில் எழுந்தமானமாக கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை தொற்று நோய் தடுப்பு நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர கூறியுள்ளார்.