மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடலுக்கு இன்றைய தினம் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்திற்கு பவனியாக ஆண்டகையின் பூதவுடல் எடுத்து வரப்பட்ட நிலையில், நேற்று முதல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன, மதம் பேதமின்றி ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், ஆயரின் உடலுக்கு அரச அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாடசாலை மாணவர்கள் உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
நாளை ஆயரின் பூதவுடல் மன்னார் இல்லத்தில் இருந்து பவனியாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
எதிர்வரும் திங்கட்கிழமை பேராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து ஆயரின் பூதவுடலுக்கு இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுவார்கள்.
இதேவேளை, திங்கட்கிழமை மன்னார் ஆயரின் இறுதி நல்லடக்கம் இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.