இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமையை கொழும்புப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்.
ஐந்து மாதங்களாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையிலேயே அவரை விடுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
‘தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் ரியாஜ் பதியுதீன் தொடர்புகளை பேணியமைக்கான ஆதாரங்கள்’ உள்ளதாகவும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்காது அவரை விடுவித்தமைக்கு தமது அதிருப்தியை வெளிடுவதாகவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அவரது விடுதலையின் பின்னால் ஏதேனும் அரசியல் தொடர்புகள் உள்ளனவா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் ஆண்டகை கூறினார்.
இதனிடையே, நேற்று ஊடகங்களுக்கு கருத்துக் கூறியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தனது சகோதரர் எவ்வித குற்றங்களும் செய்யாமலேயே 5 மாதங்களாக சிறைவாசம் அனுபவித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது எதிரணியில் உள்ள ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணைய வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அது பற்றிக் கருத்துக்கூற முடியாது என்று தெரிவித்திருந்தார்.
அத்தோடு, வவுனியாவில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் ஜனாதிபதியின்
சகோதரர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நேரில் கண்டு உரையாடிய நிகழ்வும் தென்னிலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.