“இலங்கையிலுள்ள மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களை புறக்கணிக்கும் வகையிலும், அவர்களைப் பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது”என்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு வருவது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி பதவியேற்று 16 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால், அவர் இன்னமும் வடக்கு,கிழக்குக்கு வரவில்லை. தமிழ்க் கிராமங்களை தரிசிக்கவில்லை.
வவுனியாவிலுள்ள சிங்களக் கிராமத்துக்கு மட்டும் அவர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தேன்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கிராமத்துக்கான கலந்துரையாடலில் நேரடியாக பங்கேற்கும் ஜனாதிபதி,தமிழ்க் கிராமங்களை ஏன் புறக்கணிக்கின்றார் என்று எமக்குத் தெரியவில்லை.
நாட்டின் மூவின மக்களின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச செயற்பட வேண்டும்.தமிழ் பேசும் மக்களைப் புறக்கணிக்கும் வகையிலும்,அவர்களை பழிவாங்கும் வகையிலும் அவர் செயற்படக்கூடாது.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்களுக்கும் அவர் நேரில் விஜயம் செய்து மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.