January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திங்கட்கிழமை ‘தமிழ்த் தேசிய துக்க தினம்’; தமிழ் சிவில் சமூகம் பிரகடனம்

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக 18 தமிழ் சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயர் அவர்களின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்த் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது.

தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தேசம் திக்கற்ற நிலையில் நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர். தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை,இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர்.பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதி குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

இந்நிலையில்,ஆண்டகை அவர்களின் மறைவையொட்டி அவரால் தமிழ்த் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு,கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும்,எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்துகின்றோம்.

இதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும்,பொது இடங்களிலும்,வணிக நிலையங்களிலும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும், உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்,அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.