இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை கண்டறியவும், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? என்பது தொடர்பில் ஆராய்ந்து தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தே ஆக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடாக கருதாது எமது பிரஜைகள் மீதான அக்கறையில் உண்மைகளை கண்டறியும் பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் 2009 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி 14 அம்சக் கோரிக்கையை முன்வைத்து அதில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தது.
அத்தோடு யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா?, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.
நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும், பொது ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும், சர்வாதிகார போக்கை கைவிட்டு சகல மக்களுக்குமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக நாம் கூறி வருகின்றோம்.
தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவா தீர்மானத்தினால் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என நம்ப முடியாது.அதேபோல் பொருளாதாரத் தடைகள் ஏற்படும் எனவும் கூறிவிட முடியாது.
ஒரு சிலர் அல்லது அரசாங்கம் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எம்மத்தியில் உள்ளது எனவும் அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.