தான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல எனவும், மாகாண சபை முறைக்கே எதிரானவன் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
அன்று முதல் மாகாண சபைக்கு எதிரான நிலைப்பாட்டையே நான் கொண்டுள்ளேன். இது இந்தியாவினால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கின்றேன். இது தேவையற்ற விடயமே என்று அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அவற்றுக்கென தனியான நிர்வாகங்கள் காணப்படும். இதன்போது மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும். இதனால் 9 மாகாணங்களுக்கும் என்று தனியான நிர்வாகங்கள் அவசியமற்றது என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமாக இருந்தால் அந்த தீர்மானத்தினை தான் எதிர்க்க மாட்டேன் என்றும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.