July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை”

இலங்கையில் ”அஸ்ட்ரா செனகா” கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ”அஸ்ட்ரா செனகா” கொவிட் தடுப்பூசியை முதலாவது கட்டமாக செலுத்தும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக முதலில் அதிகாரிகள் அறிவித்திருந்த நிலையில், பின்னர் அந்தத் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் 65 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 29 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் 9 இலட்சத்து 23 ஆயிரத்து 954 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முதலாம் கட்டமாகவே இவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை ஏற்ற வேண்டும் என்பதனால் மிகுதியாக இருக்கும் அஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசிகளை அதற்காக வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து 12 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவற்றில் தற்போது மூன்று இலட்சம் வரையான தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளன.

இதன்படி முதலாம் கட்டமா அந்த தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை நிறுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இன்று மாலை அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர, அந்தத் தீர்மானத்தை கைவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பாக ஆராய்ந்து பொருத்தமான முறையொன்றை பின்னர் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி தற்போது தொற்று அபாயமுள்ள வலயங்களில் வசிக்கும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு ஆராய்ந்து வருவதாகவும் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.