July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாங்கள் உருவாக்க இருக்கும் அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இருக்காது’

‘வியத் மக’ அரசாங்கம் வேண்டும் என எதிர்பார்த்த அனைவருக்கும் இன்று ஆட்சியாளர்களின் சுயரூபம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் கொள்கையும்,செயற்பாடுகளும் நாட்டு மக்களை அழிக்கும் விதமாகவே அமைந்துள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேநேரம் எதிர்வரும் காலங்களில் நாங்கள் உருவாக்க இருக்கும் அரசாங்கம், கலப்பு அரசாங்கமாக அமையாது எனவும், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் இனி இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போதும் ‘வியத் மக’ என்ற கற்ற அரசியல் தலைமைகளை உருவாக்கும் நோக்குடனும்  கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கொண்டுவரவும் பேராசிரியர்களும் கல்விமான்களும் வாக்கு சேகரித்தார்கள்.

அவர்களின் ஆட்சியின் கொள்கையில் இன்று நாட்டில் விஷ உணவுகள் இறக்குமதி செய்யப்படுகின்றது, கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.சீனி இறக்குமதியில் மிகப்பெரிய ஊழல் இடம்பெற்று வருகின்றது.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் காப்பாற்றப்படுகின்றனர். இவ்வாறு நாட்டை நாசமாக்கவே அன்று பேராசிரியர்கள், கல்விமான்கள் ஒன்றிணைந்து வியத் மகவை வெற்றிபெற செய்ய வேண்டும் என வாக்கு சேகரித்தார்கள்.

இதேவேளை, இன்று நாடு போகும் போக்கை பார்த்து இவர்கள் திருப்தியடைகின்றனரா? விலைவாசியை பார்த்து திருப்தியடைய முடிகின்றதா? இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்த 69 இலட்சம் பேரும், ஏனைய சகலருக்கும் ஆட்சியாளர்களின் உண்மை முகம் என்னவென்பது இன்று தெரியவந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.