April 28, 2025 22:29:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க பாடுபட்டவர்”: இராயப்பு ஜோசப் பற்றி பிரதமர் மகிந்த

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் இராயப்பு ஜோசப் அரும்பாடுபட்டார் எனவும், இவரின் மறைவால் துயருறும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கையின்போது நாட்டில் அமைதியைக் ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், அந்தக் காலப்பகுதியில் மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.