January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவனர் மரியசேவியர் அடிகளார் காலமானார்

திருமறைக் கலாமன்றத்தின் நிறுவனர் கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் காலமானார். அவருக்கு வயது 82.

யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த மரியசேவியர் அடிகளார், ஆரம்பக் கல்வியை இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அதன் பின்னர் சென். ஹென்றிஸ் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் தன் வாழ்வை குருத்துவப் பணியில் அர்ப்பணிக்கும் பொருட்டு 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மருதனார் குருமடத்தில் சேர்ந்து சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

1956 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.சி.பரீட்சையில் சித்தியடைந்து, குருத்துவ மேல் நிலைப்படிப்பை கண்டி அம்பிட்டிய குருமடத்தில் தொடர்ந்தார்.

1958 ஆம் ஆண்டு இசையியலில் உயர் பட்டம் பெறும் பொருட்டு ரோம் நகருக்குச் சென்று தனது 21 ஆவது வயதில் பி.ஏ.,எம்.ஏ பட்டங்களைப் பெற்றதுடன், உரோம் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1960- 1961 ஆம் ஆண்டு காலம் பணிபுரிந்தார்.

கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் 1962 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி ரோம் நகரில் தனது 22 ஆவது வயதில் திருச்சபைச் சட்டத்தின்படி பரிசுத்த தந்தை 23 ஆம் அருளப்பரின் சிறப்பு அனுமதியுடன் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

இவர் பதினைந்து வயதில் எழுதிய “மலருந் தமிழகமே மறந்து விடாதே” என்னும் கட்டுரை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மலரில் வெளிவந்தது.

சிறுவயது முதல் நாடகங்களில் நடித்துவந்த இவர், 1966 ஆம் ஆண்டு உரும்பிராயில் ‘திருமறைக் கலாமன்றம்’ என்ற அமைப்பை நிறுவி, காட்டிக்கொடுத்தவன், பலிக்களம், நல்லதங்காள், நெஞ்சக்கனல், நீ ஒரு பாதை, யூதகுமாரி முதலான பல நாடகங்களை உள்ளூரிலும் ஐரோப்பிய தேசங்களிலும் மேடையேற்றினார்.

மேலும் இந்த அமைப்பினூடாக 1990 ஆம் ஆண்டு “கலைமுகம்” என்னும் காலாண்டு கலை இலக்கிய இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக கடமையாற்றியதுடன், சிறிது காலம் ‘பாதுகாவலன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பன்மொழிப்புலமை பெற்றிருந்த அடிகளார் ஆங்கிலத்தில் Cathalic-Hindu Encounter, Jaffna: The Land of the Lute, Siddhanta Tradition’s Philosopher Sages, Life and Times of Orazio Bettachini ஆகிய நூல்களையும் ஜேர்மன் மொழியில் Die Mentaphysik des shaiva siddhanta என்ற நூலையும் ‘அளவுகோல்’, ‘கதையும் காவியமும்’, ‘ஒரு துளி’, ‘கபடமனக் காவலன்’, ‘எழுதிய கரம்’ முதலான நாடகங்களையும் ‘அருளும் இருளும்’ என்ற நடன நாடகத்தையும் மூவேந்தர், சிங்ககுலச் செங்கோல் ஆகிய நாட்டுக்கூத்துகளையும் ‘கலைமுகம்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் ‘சுவைத்தேன்’ என்ற கவிதைத் தொகுப்பையும் ஆக்கியளித்துள்ளார்.

இவருக்கு ஆளுநர் விருதும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டமும் அளித்து கௌரவமளித்துள்ளது.