இலங்கையில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள சில ஊடகவியலாளர்கள் இவ்வாறான அச்சுறுத்தல்களை தொடர்ந்து எதிர்கொண்டுவருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் அரச வாகனங்களைப் பயன்படுத்தி தம்மைக் கண்காணித்து வருவதாக ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
போருடன் தொடர்புடைய நினைவேந்தல்கள் அல்லது நில ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகள் பற்றி அறிக்கையிடுவதைத் தவிர்க்கும்படி ஊடகவியலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை,சில ஊடகவியலாளர்கள், நாட்டில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பில் அறிக்கையிடும் போது, பாதுகாப்பு பிரிவினரின் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்படுவதாகவும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் குறித்த ஆதாரங்களையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.