July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டது

நாமல் ராஜபக்ஷ

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு கொழும்பு தலைமை நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை பணச்சலவை செய்ததாக  நாமல் ராஜபக்‌ஷ மற்றும் 4 பேருக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பெப்ரவரி 27, 2020 அன்று, விசாரணைக்கு வந்த போது கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜயரத்ன, நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை 2020 ஜூலை 23 வரை நீக்கியிருந்தார்.

இந்நிலையில்,குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயண தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கடந்த  மார்ச் மாதம் 07 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது அவர் அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டதன் பின்னர், அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.